Hadith for the World
உள்ளத்தை உருக்கும் உபதேசங்கள்

உளப்பரிசுத்தம் செய்தல்

9 hadiths

9 hadiths

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'எந்தப் பாவமும் இல்லாத நிலையில் (பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில்)அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை, முஃமினான ஆணும், பெண்ணும் தங்கள் சுய வாழ்விலும், தங்கள் குழந்தைகளிலும், செல்வத்திலும் சோதனைகளை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.'இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸுஹைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்து விடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது.”இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் எனது தோல்புயத்தைப் பிடித்து, இவ்வாறு கூறினார்கள் : 'நீ இவ்வுலகில் ஒரு பரதேசியைப் போன்று, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போன்று இருந்துகொள்.' இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள் : 'நீ மாலையை அடைந்தால், காலையை அடைவதாக எதிர்பார்க்காதே! காலையை அடைந்தால், மாலையை அடைவதாக எதிர்பார்க்காதே! உனது ஆரோக்கியத்தில் இருந்து, நோய்க்காகவும், உனது வாழ்வில் இருந்து, மரணத்திற்காகவும் எடுத்துக்கொள்!'இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நீங்கள் பரஸ்பரம் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் கோபம் கொள்ள வேண்டாம் (பிறரை அதிகவிலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை உயர்த்த வேண்டாம். ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டாம், ஒருவரை ஒருவர் புறக்கணிக்க வேண்டாம். உங்களில் சிலர் சிலரின் வியாபரத்திற்கு எதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். ஆகவே அவர் அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். அவரை கைவிடமாட்டார். அவரை இழிவுபடுத்த மாட்டார். இறையச்சம் இங்குள்ளது என மூன்று முறை தனது நெஞ்சைச் சுட்டிக்காட்டினார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை அவமதித்து இழிவாகக் கருதுவது தீமைக்கு போதுமான விடயமாகும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம் (உயிர்) செல்வம் மானம் ஆகியவை ஹராமாகும்'.இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களுக்குக் கீழால் உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலால் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே, அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள அருள்களை அற்பமாகக் கருதாமல் இருக்கப் பொருத்தமானதாகும்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஆரோக்கியமும் ஓய்வும் மக்களில் அதிகமானோர் அலட்சியமாக இருக்கும் இரு அருட்கொடைகளாகும்.இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூமாலிக் அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும், பொறுமை பிரகாசமாகும். திருக்குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஒரு ஆதாரமாகும்; தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் விடுகின்றான். ஒன்று அதற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்'இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ் அஸ்ஸகபி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்.இமாம் முஸ்லிம் மற்றும் இமாம் அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ், தனது நிழலைத் தவிர வேறு நிழல்கள் இல்லாத அந்த (மறுமை) நாளில் ஏழு தரப்பினருக்கு தனது நிழலைக் கொடுப்பான் : நீதம் செலுத்தும் ஆட்சியாளன், அல்லாஹ்வை வணங்குவதிலேயே வளர்ந்த வாலிபன், தனது உள்ளத்தால் பள்ளிவாசல் களுடன் பிணைக்கப்பட்ட மனிதன். அல்லாஹ்வுக்காக நேசம்கொண்டு, அவனுக்காகவே சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்த இரு மனிதர்கள். ஒரு மனிதனை அழகும் மதிப்பும் கொண்ட ஒரு பெண் பாவத்திற்காக அழைக்க, அவர் 'அல்லாஹ்வை நான் பயப்படுகின்றேன்' என்று கூறிக் கொண்டவர். தனது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத அளவு மறைத்து, தருமம் செய்த மனிதர், அல்லாஹ்வைத் தனிமையில் நினைத்து, கண்ணீர் வடித்தவர்.இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்